ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் லீக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

Advertisement

ஷார்ஜாவில் உள்ள ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு கேப்டன் அலீசா ஹீலி மற்றும் பெத் மூனி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 41 ரன்களை எட்டியது. அதன்பின் 4 பவுண்டரிகளுடன் 26 ரன்களைச் சேர்த்த நிலையில் அலீசா ஹீலி தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.

Advertisement

அதன்பின் பெத் மூனியுடன் இணைந்த எல்லிஸ் பெர்ரியும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பெத் மூனி 40 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 30 ரன்களை எடுத்த நிலையில் எல்லிஸ் பெர்ரியும் விக்கெட்டை இழந்தார்.  இதையடுத்து களமிறங்கிய போப் லிட்ச்ஃபீல்ட் 18 ரன்களையும், கிரேஸ் ஹாரி, ஆஷ்லெ கார்ட்னர், ஜார்ஜியா வர்ஹாம் உள்ளிட்ட வீராங்கனைகள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கும் என நடையைக் கட்டினர்.

அதன் பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை மட்டுமே சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அமெலியா கெர் 4 விக்கெட்டுகளையும், புரூக் ஹாலிடே மற்றும் ரோஸ்மெரி மெய்ர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனையடுத்து சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு சூஸி பேட்ஸ் மற்றும் ஜார்ஜிய பிளிம்மர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிளிம்மர் 4 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

இதையடுத்து பேட்ஸுடன் இணைந்த அமெலியா கெர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்து முயற்சியில் இறங்கினார். ஆனால் 20 ரன்களை எடுத்த நிலையில் சூஸி பேட்ஸும், 29 ரன்களை எடுத்த நிலையில் அமெலியா கெர்ரும் என தங்கள் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளால் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்படி நட்சத்திர வீராங்கனைகள் கேப்டன் சோஃபி டிவைன், மேடி கிரீன், இசபெல்லா காஸ் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.  

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இறுதியில் நியூசிலாந்து மகளிர் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 88 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மேகன் ஸ்காட் மற்றும் அனபெல் சதர்லேண்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், சோஃபி மொலினக்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து மகளிர் அணியை வீழ்த்தியதுடன், நடப்பு உலகக்கோப்பை தொடரில் தங்களது வெற்றிப்பயணத்தையும் தொடர்ந்து வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News