மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தானை பந்தாடி அரையிறுதி சுற்றை உறுதிசெய்தது ஆஸி!

Updated: Fri, Oct 11 2024 22:41 IST
Image Source: Google

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் முனீபா அலி மற்றும் சித்ரா அமீன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முனீப அலி 7 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய சதாஃப் ஷமாஸ் 3 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சித்ரா அமீனும் 12 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஒமைமா சோஹைல் 3 ரன்களிலும், நிதா தார் 10 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 39 ரன்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அதன்பின் ஜோடி சேர்ந்த அலியா ரியாஸ் மற்றும் இராம் ஜவெத் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் இராம் ஜவெத் 12 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், நிதானமாக விளையாடி வந்த அலியா ரியாஸ் 26 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளும் ஆஸ்திரேலிய பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் மகளிர் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 82 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. 

ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆஷ்லே கார்ட்னர் 4 விக்கெட்டுகளையும், அனபெல் சதர்லேண்ட் மற்றும் ஜார்ஜியா வர்ஹேம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு பெத் மூனி மற்றும் கேப்டன் அலிசா ஹீலி இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் 15 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் பெத் மூனி தனது விக்கெட்டை இழந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த அலிசா ஹீலி 37 ரன்களை எடுத்த நிலையில் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். பின்னர் இணைந்த எல்லிஸ் பெர்ரி 22 ரன்களையும், ஆஷ்லே கார்ட்னர் 7 ரன்களையும் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 11 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதி வாய்ப்பையும் உறுதிசெய்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை