ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் மகளிர் அணிக்கு முனீபா அலி - குல் ஃபெரோசா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குல் ஃபெரோசா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சித்ரா அமீன் 8 ரன்களிளுக்கும், ஒமைமா சொஹைல் 3 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அவர்களைத் தொடர்ந்து மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முனீபா அலியும் 17 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனால் பாகிஸ்தான் அணி 41 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

Advertisement

அதன்பின் களமிறங்கிய நிதா தார் ஒருபக்கம் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்த நிலையில், மறுபக்கம் களமிறங்கிய அலியா ரியாஸ் 4 ரன்களுக்கும், கேப்டன் ஃபத்திமா சனா 13 ரன்களுக்கும், துபா ஹசன் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். அவர்களைத் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதா தாரும் 28 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இறுதியில் சயீத் அரூப் ஷா 14 ரன்களையும், நஷ்ரா சந்து 6 ரன்களையும் சேர்க்க, பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்களைச் சேர்த்தது. 

இந்திய அணி தரப்பில் அருந்ததி ரெட்டி 3 விக்கெட்டுகளையும், ஸ்ரெயங்கா பாட்டில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸ்மிருதி மந்தனா 7 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஷஃபாலி வர்மாவுடன் ஜோடி சேர்ந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். 

இருவரும் இணைந்து 43 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷஃபாலி வர்மா 32 ரன்களுடன் விக்கெட்டை இந்தார். அவரைத் தொடர்ந்து 23 ரன்கள் எடுத்த நிலையில் ஜெமிமா ரோட்ரிக்ஸும் , ரன்கள் ஏதுமின்றி ரிச்சா கோஷும் என தங்கள் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இருப்பினும் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 29 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக காயமடைந்து ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினர். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இறுதியில் சாஜனா முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. மேலும் இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அருந்ததி ரெட்டி ஆட்டநாயகி விருதினை வென்றார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News