ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு திலாரா அக்தர் - சதி ராணி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சதி ராணி 9 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அணியின் மற்றொரு தொடக்க வீராங்கனை திலாரா அக்தரும் 19 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

பின்னர் இணைந்த சோபனா - கேப்டன் நிகர் சுல்தானா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் சோபனா 16 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தாஜ் நெஹார் ஒரு ரன்னிலும், ஷொர்னா அக்தர் ரன்கள் ஏதுமின்றியும், ரிது மோனி 10 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிகர் சுல்தானா 4 பவுண்டரிகளுடன் 39 ரன்களை எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். 

இதனால் வங்கதேச மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களைச் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய கரிஷ்மா ராம்ஹரக் 4 விக்கெட்டுகளையும், அஃபி ஃபிளெட்சர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ஹீலி மேத்யூஸ் மற்றும் ஸ்டெஃபானி டெய்லர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன், அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்து கொடுத்தனர். 

இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அதிரடியாக விளையாடி வந்த ஹீலி மேத்யூஸ் 6 பவுண்டரிகளுடன் 34 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனையான ஸ்டெஃபானி டெய்லர் 27 ரன்களை எடுத்திருந்த நிலையில் காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்பினார். அவரைத்தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய காம்பெல்லும் 21 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இருப்பினும் அடுத்து களமிறங்கிய டியாண்ட்ரா டோட்டின் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 19 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 12.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வங்கதேச பேட்டர்களை கட்டுப்படுத்திய கரிஷ்மா ராம்ஹர்க் ஆட்டநாயகி விருதை வென்றார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News