பிசிசிஐ-யை கடுமையாக விமர்சித்த ஆஃப்கான் பயிற்சியாளர்!

Updated: Sun, Oct 08 2023 12:07 IST
பிசிசிஐ-யை கடுமையாக விமர்சித்த ஆஃப்கான் பயிற்சியாளர்! (Image Source: Google)

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றில் வங்கதேசம் - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதிய போட்டி தரம்சாலா மைதானத்தில் நடைபெற்றது. அந்த மைதானத்தின் அவுட் - பீல்டு பகுதிகள், அதாவது பிட்ச் அல்லாத வீரர்கள் பீல்டிங் செய்யும் மற்ற பகுதி மிக மோசமான நிலையில் இருந்தது. வீரர்கள் பீல்டிங் செய்ய கீழே விழும் போது அவர்களுக்கு காயம் ஏற்படும் வகையில் இருந்தது அவுட் பீல்டு.

பொதுவாக அந்த பகுதியில் அதிக அளவிலான புற்கள் இருக்க வேண்டும். அந்த புற்களை சரியாக வெட்டி, சிறிய அளவில் தரையோடு, தரையாக இருக்கும் வகையில் பராமரிக்க வேண்டும். மேலும், மண்ணோடு அந்த புற்கள் வெளியே வரும் வகையிலும் இருக்கக் கூடாது. அப்போது தான் வீரர்கள் பீல்டிங் செய்ய கீழே விழுந்தாலும், அவர்களுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படாமல் அந்த புற்கள் தடுக்கும்.

மாறாக, தரம்சாலாவில் பல பகுதிகளில் புற்களே காணப்படவில்லை. மண் தரையாகவே சில இடங்கள் காட்சி அளித்தது. அது மட்டுமின்றி, சில இடங்களில் வீரர்கள் பீல்டிங் செய்ய கீழே சறுக்கும் போது மண் அவர்கள் காலோடு பெயர்த்துக் கொண்டு வந்தது. குறிப்பாக முஜீப் உர் ரஹ்மான் பவுண்டரி எல்லை அருகே சறுக்கிக் கொண்டே சென்று பந்தை தடுக்க முயற்சி செய்த போது பெரும் அளவிற்கு மண் பெயர்த்துக் கொண்டு வந்தது. அவரது முட்டி அப்போது தரையில் மோதியது. நல்ல வேளையாக அவருக்கு காயம் ஏற்படவில்லை.

இந்த நிலையில் தான் ஆஃப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளரும், முன்னாள் இங்கிலாந்து வீரரும் ஆன ஜொனாதன் டிராட் தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “அந்த போட்டியில் எங்களின் வீரர் முஜீப் உர் ரகுமான் மிகப்பெரிய காயம் ஏற்படுவதில் இருந்து தப்பி இருக்கிறார். 

ஏற்கனவே இந்த உலகக் கோப்பையின் முதல் போட்டியில் கான்வே மிகப்பெரிய காயத்தில் இருந்து தப்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. போட்டி அமைப்பாளர்கள் இது போன்ற விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். நாங்கள் தோற்றதால் இதை ஒரு காரணமாக கூறவில்லை. ஆடுகளத்தில் வீரர்களின் பாதுகாப்பு அவசியம்” என தெரிவித்துள்ளார்.

 

மேலும் வங்கதேச அணி பில்டிங் செய்த போது வர்ணனையாளர்களாக பணியாற்றிய நாசிர் ஹுசைன் மற்றும் மேத்யூ ஹைடன் ஆகியோர் தர்மசாலா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் வெளிப்புற ஆடுகளத்தை அருகில் இருந்த ஒரு சிறிய மைதானத்தின் அவுட்ஃபில்டோடு ஒப்பிட்டு பேசி கிண்டல் செய்தனர். இரண்டு மைதானங்களில் வெளிப்புற ஆடுகளங்கள் ஒரே மாதிரி இருப்பதாக நேற்றைய போட்டியின் நேரலையின் போது கிண்டல் செய்ததது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை