ஐசிசி உலகக்கோப்பை 2023 இறுதிப்போட்டி: இந்தியாவை 240 ரன்களில் சுருட்டியது ஆஸ்திரேலியா!

Updated: Sun, Nov 19 2023 18:00 IST
Image Source: Google

இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்றுடன் முடிவடையவுள்ளது. இதில் அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மாவுடன் ஷுப்மன் கில் களமிறங்கினார். இதில் ரோஹித் சர்மா வழக்கம்போல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷுப்மன் கில் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் ரோஹித் சர்மா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயரும் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து விராட் கோலியுடன் இணைந்த கேஎல் ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார். 

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டிய விராட் கோலி தனது அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில், 54 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜாவும் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த கேஎல் ராகுல் அணியை இறுதிவரை அழைத்துச்செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதனைத்தொடர்ந்து அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 18 ரன்களிலும், முகமது ஷமி 6 ரன்களிலும், ஜஸ்ப்ரித் பும்ரா ஒரு ரன்னிலும் என ஆட்டமிழக்க, 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹசில்வுட் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை