WPL 2023: நாரிஸ் பந்துவீச்சில் வீழ்ந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!

Updated: Sun, Mar 05 2023 18:51 IST
WPL 2023: A Comprehensive Win For Delhi Capitals Over RCB! (Image Source: Google)

மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி வெற்றி வாகை சூடியது. இதையடுத்து இன்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. 

அதன்படி டெல்லி  மகளிர் அணியின் கேப்டன் மெக் லேனிங் மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோர் ரன் கணக்கை தொடங்கினர். ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய ஷெஃபாலி வர்மா ஒவ்வொரு பந்து வீச்சாளர்களையும் விட்டு வைக்காமல் ஒவ்வொருவரது ஓவரிலும் சிக்சரும், பவுண்டரியுமாக விளாசி தள்ளினர். தொடக்க வீராங்கனைகள் இருவரும் அதிரடி காட்டி விளையாட முதல் விக்கெட்டுக்கு 162 ரன்கள் குவித்தனர். 

அதன்பின் மெக் லேனிங் 43 பந்துகளில் 14 பவுண்டரிகள் உள்பட 72 ரன்கள் அடித்தார். ஷெஃபாலி வர்மாவும் தன் பங்கிற்கு அதிரடியாக விளையாடி 45 பந்துகளில் 4 சிக்சர்கள் 10 பவுண்டரிகள், உள்பட 84 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 84 ரன்களில் ஆட்டமிழந்தார். 

எனினும், மகளிர் பிரீமியர் லீக் தொடரில் அதிகமாக ரன் அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 65 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அதோடு அந்த அணி 207 ரன்கள் சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இவரைத் தொடர்ந்து வந்த கேப் 39 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 22 ரன்களும் எடுக்கவே டெல்லி கேபிடல்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்து 200 ரன்களுக்கு மேல் குவித்த 2ஆவது அணி என்ற பெருமையையும், மகளிர் பிரீமியர் லீக் முதல் சீசனில் அதிக ரன்கள் குவித்த முதல் அணி என்ற சாதனையையும் படைத்தது.

இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா - சோஃபி டிவைன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன், அடிதளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். இதில் டிவைன் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஷஃபாலி வர்மாவின் அபாரமான கேட்ச்சின் மூலம் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் மந்தனாவுடன் இணைந்த எல்லிஸ் பெர்ரியும் அதிரடியாக விளையாடினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா 23 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 35 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 19 பந்துகளில் 31 ரன்களைச் சேர்த்திருந்த எல்லிஸ் பெர்ரியும் விக்கெட்டை இழந்தார். 

இதையடுத்து வந்த திஷா கசத், ரிச்சா கோஷ், கனிகா ஆகியோர் நாரிஸின் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஹீதர் நைட் - மேகன் ஸ்காட் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதன்பின் 21 பந்துகளில் 34 ரன்களைச் சேர்த்த நிலையில் ஹீதர் நைட்டும் நாரிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

ஹீதர் நைட்டின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் தாரா நாரிஸ் தனது 5ஆவது விக்கெட்டையும் கைப்பற்றி, மகளிர் பிரீமியர் லீக் தொடரில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் வீராங்கனை எனும் சாதனையைப் படைத்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களை மட்டுமே எடுத்தது. 

இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதில் டெல்லி அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய தாரா நாரிஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு காரணமாக இருந்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை