இரண்டாவது சீசன் மகளீர் பிரீமியர் லீக் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் நாக் அவுட் சுற்று போட்டிகளுக்கு மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் முன்னேறியுள்ள நிலையில், மீதமிருக்கும் ஒரு இடத்திற்காக மூன்று அணிகள் போட்டியிட்டு வருகின்றன. அந்தவரியில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் - யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு கேப்டன் பெத் மூனி - லாரா வோல்வார்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் இருவரும் முதல் ஓவரில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லாரா வோல்வார்ட் 8 பவுண்டரி, ஒரு சிக்சர் என 43 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அதனைத்தொடர்ந்து களமிறங்கிய தயாளன் ஹேமலதா ரன்கள் ஏதுமின்றியும், ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 4 ரன்களுக்கும், ஆஷ்லே கார்ட்னர் 15 ரன்களுக்கும், பாரதி ஒரு ரன்னிலும், கேத்ரின் பிரைஸ் ஒரு ரன்னுக்கும் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு தங்களது விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதேசமயம் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் பெத் மூனி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், கடைசி வரை களத்தில் இருந்த பெத் மூனி, ஃபோபி எக்லெஸ்டோன் வீசிய கடைசி ஓவரில் அடுத்தடுத்து 5 பவுண்டரிகளை விளாசி அணிக்கு தேவையான ஃபினீஷிங்கைக் கொடுத்தார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பெத் மூனி 10 பவுண்டரி, ஒரு சிக்சர் என 74 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களைச் சேர்த்தது. யுபி அணி தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News