அதிரடியாக விளையாட எனக்கு சிறப்பு மந்திரம் எதுவும் இல்லை - ஹர்மன்ப்ரீத் கவுர்!

Updated: Sun, Mar 10 2024 14:00 IST
Image Source: Google

மகளீர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ்  அணி பெத் மூனி மற்றும் தயாளன் ஹேமலதா ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் வலுவான இலக்கை நிர்ணயித்தது. 

இதில் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக தமிழக வீராங்கனை தயாளன் ஹேமலதா 9 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 74 ரன்களையும், கேப்டன் பெத் மூனி 8 பவுண்டரி, 3 சிக்சர்கள் என என 66 ரன்களையும் சேர்த்தனர். மும்பை இந்தியன்ஸ் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய சைகா இஷாக் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணியில் ஹீலி மேத்யூஸ், நாட் ஸ்கைவர் பிரண்ட் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த யஷ்திகா பாட்டியா - கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட யஷ்திகா பாட்டியா 49 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

ஆனாலும் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்மன்ப்ரீத் கவுர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் 10 பவுண்டரி, 5 சிக்சர்களை விளாசி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாச்சத்தில் குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஹர்மன்ப்ரீத் கவுர் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டா. 

இந்நிலையில் இப்போட்டி முடிந்து தனது அதிரடியான ஆட்டம் குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், “இதில் எந்த ரகசியமும் இல்லை, இது கணக்கீடுகளைப் பற்றியது. சர்வதேச அளவில், ரன் சேஸை எப்படி கணக்கிடுவது என்பது அனைவருக்கும் தெரியும். ஸ்கோர்போர்டில் ஒரு ஓவரில் 10 ரன்கள் தேவை என்றால், நீங்கள் அதற்கேற்ப பேட்டிங் செய்வீர்கள்.

அந்தவகையில் இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்ததில் எனக்கு சிறப்பு மந்திரம் எதுவும் இல்லை. மேலும் இப்போட்டியின் இறுதிக்கட்டத்தில் என்னுடன் பேட்டிங் செய்த அமெலியா கெருடன் எனது ஒத்துழைப்பு தெளிவாக இருந்ததால், எங்களால் இதனை சாதிக்க முடிந்தது” என்று தெரிவித்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு சீசன் டபிள்யூபிஎல் தொடரின் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை