WPL 2025: ஜெஸ் ஜோனசன், ஷஃபாலி வர்மா அதிரடியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!

Updated: Tue, Feb 25 2025 22:40 IST
Image Source: Google

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று பெங்களூருவில் நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

இதனையடுத்து பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு பெத் மூனி மற்றும் ஹர்லீன் தியோல் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்லீன் தியோல் 5 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய ஃபோப் லிட்ச்ஃபீல்டும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து பெத் மூனியும் 10 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் காஷ்வீ கௌதம் எதிர்கொண்ட முதல் பந்திலேயும், அணியின் கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் 3 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். 

அடுத்து வந்த டியாண்டிரா டோட்டினும் தனது பங்கிற்கு 5 பவுண்டரிகளுடன் 26 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். இதனால் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 60 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த தனுஜா கன்வர் - பாரதி ஃபுல்மாலி இணை பொறுப்பான ஆட்டத்தை ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் தனுஜா கன்வர் 16 ரன்னில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பாரதி 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 40 ரன்களைக் குவித்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.

இதன்மூலம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்களைச் சேர்த்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மரிஸான் கேப், ஷிகா பாண்டே மற்றும் அனபெல் சதர்லேண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேப்டன் மெக் லெனிங் - ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மெக் லெனிங் 3 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

அவரைத்தொடர்ந்து ஷஃபாலி வர்மாவுடன் ஜோடி சேர்ந்த ஜெஸ் ஜோனசனும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அரைசதத்தை நெருங்கிய ஷஃபாலி வர்மா 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 44 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 5 ரன்னிலும், அனபெல் சதர்லேண்ட் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

Also Read: Funding To Save Test Cricket

ஒருபக்கம் விக்கெட்ட்கள் சரிந்தாலும் மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெஸ் ஜோனசன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 61 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 15.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் முதலிடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை