பேட்டர்கள் அதிக பொறுப்பை ஏற்க வேண்டும் - ஹர்மன்ப்ரீத் கவுர்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியானது 19.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நாட் ஸ்கைவர் பிரண்ட் 80 ரன்களையும், கேப்டன் ஹர்னம்பிரீத் கவுர் 42 ரன்களையும் சேர்த்தனர். கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் அனபெல் சதர்லேண்ட் 3 விக்கெட்டுகளையும், ஷிகா பாண்டே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஷஃபாலி வர்மா 43 ரன்களைச் சேர்த்தி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார்.
பின்னர் களமிறங்கிய வீராங்கனைகள் அடுத்தடுத்து சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்த நிலையிலும் அறிமுக வீராங்கனை நிக்கி பிரசாத் 35 ரன்களையும், ராதா யாதவ் 9 ரன்களையும், கடைசி பந்தில் வெற்றிக்கு தேவையான இரண்டு ரன்களை அருந்ததி ரெட்டியும் சேர்த்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து கேப்டன் மும்பை அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், “எங்களால் ஒரு நல்ல ஸ்கோரை அமைக்க முடியவில்லை. நானும் நாட் ஸ்கைவரும் பேட்டிங் செய்யும்போது 200 ரன்களைக் கடப்போம் என்று நினைத்தேன். ஆனால் நாங்கள் இறுதியில் எதிர்கொள்ளாமல் இருந்த ஐந்து பந்துகளும் எங்களுக்கு தோல்வியை பரிசளித்தது. இஸ்மாயில் ஒரு சிறந்த பந்து வீச்சாளர். அவர் எங்களுக்கான திருப்புமுனையை உருவாக்கினார்.
Also Read: Funding To Save Test Cricket
பயிற்சி ஆட்டங்களில் சஜனா எங்களுக்கு நன்றாகச் செய்தார். துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் அவரது பந்துவீச்சைத் தவறாகப் பயன்படுத்தினோம், அது அவருக்கு இழப்பை ஏற்படுத்தியது. முதல் விஷயம் என்னவென்றால், நாங்கள் 20 ஓவர்கள் விளையாட விரும்புகிறோம். நாங்கள் 20 ஓவர்கள் முழுவதும் பேட்டிங் செய்ய வேண்டும். மேலும் செட் பேட்டர் 20 ஓவர்கள் பேட்டிங் செய்ய வேண்டும். நான் விளையாடியபோது, நான் நீண்ட நேரம் விளையாடியிருக்க வேண்டும். அதனால் அடுத்த போட்டியில் பேட்டர்கள் அதிக பொறுப்பை ஏற்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.