WPL 2025: குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றி!

Updated: Mon, Mar 10 2025 23:03 IST
Image Source: Google

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின. 

மும்பையில் உள்ள பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹீலி மேத்யூஸ் மற்றும் அமெலியா கெர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெலியா கெர் 5 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் மேத்யூஸுடன் இணைந்த நாட் ஸ்கைவர் பிரன்ட்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் ஹீலி மேத்யூஸ் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 27 ரன்கள் எடுத்திருந்த ஹீலி மேத்யூஸ் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 6 பவுண்டரிகளுடன் 38 ரன்களை எடுத்திருந்த நாட் ஸ்கைவர் பிரண்ட்டும் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் அமன்ஜோத் கவுர் இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்மன்ப்ரீத் கவுர் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். மறுபக்கம் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 27 ரன்களைச் சேர்த்த நிலையில் அமஞ்ஜோத் கவுர் ஆட்டமிழந்தார். 

அதன்பின் 9 பவுண்டரிகளுடன் 58 ரன்களைச் சேர்த்த கையோடு ஹர்மன்ப்ரீத் கவுரும் தனது விக்கெட்டை இழந்தார். இறுதியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷ்திகா பாட்டியா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 13 ரன்களையும், சஜீவன் சாஜனா 11 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களைச் சேர்த்தது. குஜராத் அணி தரப்பில் ஆஷ்லே கார்ட்னர், தனுஜா கன்வர், காஷ்வீ கௌதம், பிரியா மிஸ்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு பெத் மூனி - கஷ்வி கௌதம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெத் மூனி 7 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, 10 ரன்களுடன் காஷ்வி கௌதமும் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஹர்லீன் தியோல் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்தார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் இப்போட்டியில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

அவரைத்தொடர்ந்து 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்லீன் தியோல் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய போப் லிட்ச்ஃபீல்ட் 22 ரன்களுக்கும், டியான்டிர டோட்டின் 10 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் யாரும் எதிர்பாரத வகையில் 7ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கிய பார்தி ஃபுல்மாலி அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசியதுடன், 19 பந்துகளில் தனது அரைசதத்தையும் பூர்த்தி செய்து மிரட்டினார். இதன்மூலம் குஜராத் அணி இப்போட்டியை எளிதாக வென்று விடும் என எதிர்பார்க்கப்பட்டது. 

Also Read: Funding To Save Test Cricket

ஆனால் அச்சமயத்தில் 8 பவுண்டரிக் 4 சிக்ஸர்கள் என 61 ரன்களை எடுத்திருந்த பார்தி ஃபுல்மாலி தனது விக்கெட்டை இழந்தார். இதனால் குஜராத் அணி வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் வெற்றிபெற 22 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இறுதியில் தனுஜா கன்வர் 10 ரன்களிலும், சிம்ரன் ஷேக் 17 ரன்களிலும் ஆட்டமிழக்க, குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை