மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்த எட்டு அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் முன்னேறி அசத்தியுள்ளன. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டி இன்று மும்பையில் உள்ள பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மும்பை இந்தியன்ஸை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு யஷ்திகா பாட்டியா மற்றும் ஹீலி மேத்யூஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஹீலி மேத்யூஸ் 3 ரன்களிலும், யஷ்திகா பாட்டியா 8 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் நாட் ஸ்கைவர் பிரண்ட் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். 

Advertisement

ஒருகட்டத்திற்கு மேல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்மன்ப்ரீத் கவுர் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். இதன் மூலம் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், நாட் ஸ்கைவர் பிரண்ட் 30 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய எமெலியா கெர் 2 ரன்களிலும், சஜீவன் சஞ்சனா ரன்கள் ஏதுமின்றியும் என ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடி வந்த ஹர்மன்ப்ரீத் கவுரும் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 66 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

இறுதியில் கமலினி 10 ரன்களில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அமன்ஜோத் கவுர் 14 ரன்களையும், சமஸ்கிருதி குப்தா 8 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை மட்டுமே எடுத்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மரிஸான் கேப், ஜெஸ் ஜோனசன் மற்றும் நல்லபுரெட்டி சரணி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேப்டன் மெக் லெனிங் மற்றும் ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மெக் லெனிங் 13 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷஃபாலி வர்மா 4 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஜெஸ் ஜோனசென் - ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதைல் ஜோனசென் 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அனபெல் சதர்லேண்ட் 2 ரன்களில் நடையைக் கட்ட, அதிரடியாக விளையாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 4 பவுண்டரிகளுடன் 30 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய சாரா பிரைஸ் 5 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த மரிஸான் கேப் - நிக்கி பிரசாத் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் முயற்சியில் இறங்கினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மரிஸான் கேப் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 40 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷிகா பாண்டே, மின்னு மணி ஆகியோரும் சோபிக்க தவற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களை மட்டுமே எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் நாட் ஸ்கைவர் பிரண்ட் 3 விக்கெட்டுகளையும், அமெலியா கெர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், இரண்டாவது முறையாக டபிள்யூபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றும் சாதித்துள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News