ஒரு நல்ல அணிக்கு எதிராக 120 ரன்கள் எடுத்தால் போதாது - ஹர்மன்ப்ரீத் கவுர்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்களை மட்டுமே சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்ம், ஹீலி மேத்யூஸ் ஆகியோர் தலா 22 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். டெல்லி கேப்பிட்டல்ஸ் தர்பபில் ஜெஸ் ஜோனசன், மின்னு மணி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேப்டன் மெக் லெனிங் மற்றும் ஷஃபாலி வர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளமிட்டனர்.
இதில் ஷஃபாலி வர்மா 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 43 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதேசமயம் மறுமுனையில் அபாரமாக விளையாடிய மெக் லெனிங் அரைசதம் கடந்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 9 பவுண்டரிகளுடன் 60 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய மும்பை அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், “திட்டமிட்டபடி விஷயங்கள் நடக்காத நாட்களில் இன்றும் ஒன்று என்று நினைக்கிறேன். முதல் ஆறு ஓவர்களில் ரன்கள் எடுக்க நாங்கள் சிரமப்பட்டோம், மிடில் ஓவர்களில் ஓரளவுக்கு ரன்களைச் சேர்க்கும் வாய்ப்பை பெற்றோம், ஆனால் அதைத் தொடர முடியவில்லை. ஒரு நல்ல அணிக்கு எதிராக 120 ரன்கள் எடுத்தால் போதாது.
Also Read: Funding To Save Test Cricket
கடந்த மூன்று ஆட்டங்களில் நாங்கள் எல்லாவற்றையும் சரியாகச் செய்தோம், இன்னும் நல்ல நிலையில் இருக்கிறோம். இன்னும் முக்கியமான போட்டிகள் வரவிருப்பதால், இந்த ஆட்டத்தை மறந்துவிடுங்கள் என்று அணியிடம் சொல்ல விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்ததாக யுபி வாரியர்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.