WPL 2025: மும்பையை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது ஆர்சிபி!

Updated: Tue, Mar 11 2025 23:25 IST
Image Source: Google

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்று வரும் 20ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ம்ற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் சபினேனி மேக்னா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் சபினேனி மேக்னா 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் மந்தனாவுடன் இணைந்த எல்லிஸ் பெர்ரியும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. 

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேற்கொண்டு இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், 6 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 53 ரன்களை எடுத்திருந்த ஸ்மிருதி மந்தனா விக்கெட்டை இழந்தார். பின்னர் எல்லிஸ் பெர்ரியுடன் இணைந்த ரிச்சா கோஷும் அதிரடியை தொடர அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயர்ந்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரிச்சா கோஷ் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 36 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த எல்லிஸ் பெர்ரி 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 49 ரன்களையும், ஜார்ஜிய வேர்ஹாம் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 31 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 199 ரன்களைக் குவித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ஹீலி மேத்யூஸ் 2 விக்கெட்டுகளையும், அமெலியா கெர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். இதனையடுத்து 200 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது.

அதன்படி அந்த அணிக்கு ஹீலி மேத்யூஸ் - அமெலியா கெர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய ஹீலி மேத்யூஸ் 4 பவுண்டரிகளுடன் 19 ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீராங்கனை அமெலியா கெர் 9 ரன்கள் மட்டுமே எடுத்த கையோடு பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய நாட் ஸ்கைவர் பிரண்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். மறுபக்கம் அவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 20 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

Also Read: Funding To Save Test Cricket

இதற்கிடையில் அரைசதம் கடந்திருந்த நாட் ஸ்கைவர் பிரண்ட்டும் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 69 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த சஜீவன் சஞ்னாவும் 23 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆர்சிபி தரப்பில் ஸ்நே ரானா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் ஆர்சிபி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை