WPL 2025: ஆர்சிபியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெறும் 14ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் டேனியல் வையட் இனை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீராங்கனை டேனியல் வையட் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 21 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த எல்லிஸ் பெர்ரி மற்றும் ராக்வி பிஸ்ட் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் இணைந்து அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் 4ஆவாது விக்கெட்டிற்கு 66 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ராக்வி பிஸ்ட் 2 சிக்ஸர்களுடன் 33 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய எல்லிஸ் பெர்ரி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
ஆனால் மறுபக்கம் களமிறங்கிய அதிரடி வீராங்கனை ரிச்சா கோஷ் 5 ரன்னிலும், கனிகா அஹுஜா 2 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து இழந்து ஏமாற்றமளித்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த எல்லிஸ் பெர்ரி 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 60 ரன்களையும், ஜார்ஜியா வேர்ஹாம் 12 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களைச் சேர்த்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷிகா பாண்டே, நல்லபுரெட்டி சரணி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேப்டன் மெக் லெனிங் மற்றும் ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மெக் லெனிங் 2 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிதார். பின்னர் ஷஃபாலி வர்மாவுடன் இணைந்த ஜெஸ் ஜோனசன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களின் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இமாலய ஃபார்ட்னர்ஷிப்பையும் அமைத்து அணிக்கு தேவையான ஸ்கோரையும் கொண்டு வந்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷஃபாலி வர்மா 8 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 80 ரன்களையும், ஜெஸ் ஜோனசன் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 61 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 15.3 ஓவர்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு டபிள்யூபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாகவும் டெல்லி கேப்பிட்டல்ஸ் முன்னேறி அசத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.