அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் விருத்திமான் சஹா!
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் விருத்திமான் சஹா. முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஓய்வுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டராக செயல்பட்டு வந்த இவர், இந்திய அணியின் வெற்றிகளிலும் தனது பங்களிப்பினை வழங்கியுள்ளார்.
அதன்படி, இந்திய அணிக்காக 2010ஆம் ஆண்டு அறிமுகமான இவர் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 சதங்கள், 6 அரைசதங்கள் என 1353 ரன்களையும், 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 41 ரன்களையும் சேர்த்துள்ளார். இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டிற்கு பிற்கு சர்வதேச அளவில் பெரிதளவில் சோபிக்க தவறிய சஹா, அதன்பின் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் தடுமாறி வந்தார். அதன்பின் உள்ளூர் போட்டிகளிலும், ஐபிஎல் தொடரிலும் மட்டுமே விளையாடி வந்தார்.
இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடி வரும் விருத்திமான் சஹா, அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். மேற்கொண்டு தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி தொடரே தனது கடைசி தொடராக இருக்கும் என அறிவித்து இருக்கிறார். தற்சமயம் 40 வயதை எட்டியுள்ள அவர் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்திருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் தனது ஓய்வு முடிவு குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நேசத்திற்குரிய கிரிக்கெட் பயணத்தில் இந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் சீசனே எனது கடைசி தொடராக இருக்கும். நான் ஓய்வு பெறுவதற்கு முன் ஒரு முறை கடைசியாக பெங்கால் அணிக்காக விளையாட இருக்கிறேன். இது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த சீசனை எப்போதும் மனதில் வைத்து இருப்பேன்" என்று பதிவிட்டுள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
இதனையடுத்து விருத்திமான் சஹாவின் எக்ஸ் தல பதிவானது தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ள விருத்திமான் சஹாவிற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.