WTC 2023 Final: சீட்டுக்கட்டாய் சரிந்த டாப் ஆர்டர்; ஃபாலோ ஆனை தவிர்க்குமா இந்தியா?

Updated: Thu, Jun 08 2023 22:50 IST
WTC 2023: Australia firmly in control of the World Test Championship Final! (Image Source: Google)

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 327 ரன்கள் குவித்தது. ட்ராவிஸ் ஹெட் சதமடித்தார். முதல் ஆட்ட நேர முடிவில் ஹெட் 146 ரன்னுடனும், ஸ்மித் 95 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கிய சிறிது நேரத்தில் ஸ்டீவன் ஸ்மித் சதமடித்தார். அணிக்கு பக்கபலமாக இருந்த ட்ராவிஸ் ஹெட் 163 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் ஸ்மித் 121 ரன்களில் வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய  அலெக்ஸ் கேரி மட்டும் 48 ரன்களைச் சேர்த்த நிலையில் மற்ற வீரர்கள் யாரும் சோபிக்காததால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 469 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், ஷமி, ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் களமிறங்கினர். இதில் பேட் கம்மின்ஸ் வீசிய 6ஆவது ஓவரில் எல்பிடபள்யூ முறையில் 15 ரன்களில் அவுட்டானார் ரோஹித். அவரைத் தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மன் கில் அடுத்த ஓவரிலேயே 13 ரன்களில் போல்டாகி வெளியேறினார். 

அதன்பின் களமிறங்கிய சட்டேஷ்வர் புஜாரா 14 ரன்களில் கேமரூன் கிரீன் வீசிய பந்தை பேட்டை தாண்டி அனுமதித்த விளைவு அவரும் போல்டாக விராட் கோலி இருக்கிறார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் 14 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலியும் மிட்செல் ஸ்டார்க்கின் அபாரமான பவுன்சரின் மூலம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்ப இந்திய அணி தடுமாறியது.

அதன்பின் ஜோடி சேர்ந்த அஜிங்கியா ரஹானே - ரவீந்திர ஜடேஜா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். பின் அதிரடியாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாதன் லையன் பந்துவீச்சில் 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் கடக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இதையடுத்து ரஹானேவுடன் இணைந்த கேஎஸ் பரத் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் ரஹானே 29 ரன்களுடனும், பரத் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதையடுத்து 318 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி நாளை முதல் இன்னிங்ஸைத் தொடரவுள்ளது.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை