WTC final: கான்வே அரைசதம்; விக்கெட் வீழ்த்த தடுமாறும் இந்தியா!
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது உலகடெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்ப்டனில் ஜூன் 18தொடங்குவதாக இருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் ‘டாஸ்’ கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் 2ஆவது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்று பந்து வீச்சை நியூசிலாந்து தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 64.4 ஓவர்களில் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்திருந்து.
3ஆம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், விராட் கோலி 44 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 4 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அஸ்வினும் 22 ரன்களில் வெளியேறினார்.
நடுவரிசை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வெளியேறியதால், 200 ரன்களை எட்டவே இந்திய அணி கடும் பாடுபட்டது. 92.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்திய அணி 217 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரகானே 49 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து அணியை பொறுத்தவரை பந்து வீச்சில் ஜேமிசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய நீயூசிலாந்து அணிக்கு டேவன் கான்வே - டாம் லேதம் இணை சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. அவர்கள் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 71 ரன்களைச் சேர்த்தனர்.
அதன்பின் 30 ரன்கள் எடுத்திருந்த டாம் லாதம், விராட் கோலியின் அபாரமான கேட்ச்சல் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். மறுமுனையிலிருந்த டேவன் கான்வே பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
பின் 54 ரன்கள் எடுத்திருந்த கான்வே இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 101 ரன்களைச் சேர்த்துள்ளது. அந்த அணியில் கேன் வில்லியம்சன் 12 ரன்களுடனும், ராஸ் டெய்லர் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.
இதையடுத்து 116 ரன்கள் பின் தங்கிய நிலையில் நியூசிலாந்து அணி இன்று நான்காம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸை தொடரவுள்ளது.