சிக்சர் விளாசி சதமடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்; வைரலாகும் காணொளி!

Updated: Fri, Feb 02 2024 15:10 IST
Image Source: Google

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. 

இப்போட்டியில் டாஸை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.  இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரோஹித் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 14 ரன்கள் எடுத்த நிலையில் ரோஹித் சர்மா விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜெய்ஸ்வாலுடன் இணைந்த ஷுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். 

அதன்பின் 34 ரன்கள் எடுத்த நிலையில் ஷுப்மன் கில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதேசமயம் மறுமுனையில் 27 ரன்கள் எடுத்திருந்த ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட்டை இழந்து மீண்டும் ஒருமுறை ஏமாற்றத்தைக் கொடுத்தார். பின்னர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இனைந்த ராஜத் பட்டிதார் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார்.

 

ஆனால், ஜெய்ஸ்வால் வழக்கம் போல தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிக்ஸரும், பவுண்டரியும் விளாசி அவர், 150 பந்துகளில் 94 ரன்கள் எடுத்திருந்த போது, டாம் ஹார்ட்லி பந்துவீச்சில் சிக்ஸர் விளாசி சொந்த மண்ணில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இதற்கு முன்னதாக தனது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தனது அறிமுக போட்டியில் சதம் விளாசி சாதனை படைத்தார். அந்தப் போட்டியில் ஜெய்ஸ்வால் 171 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து அபாரமாக விளையாடிவரும் ஜெய்ஸ்வால் தற்போது 150 ரன்களை நெருங்கி வருகிறார். இந்நிலையில் இப்போட்டியில் சிக்சர் அடித்து தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தைப் பதிவுசெய்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::