சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைக்க காத்திருக்கும் ஜெய்ஸ்வால்!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இந்த போட்டி காலை 7.50 மணிக்கு தொடங்கும். இதற்காக இரு அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணிக்காக விளையாட இருக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் உலக சாதனை படைக்கு வாய்ப்பை பெற்றுள்ளார். அந்தவகையில் இந்தப் போட்டியில் ஜெய்ஸ்வால் இரண்டு சிக்ஸர்களை அடித்தால், ஒரு வருடத்தில் டெஸ்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற உலக சாதனையைப் படைப்பார். ஜெய்ஸ்வால் இந்த ஆண்டு விளையாடிய 11 டெஸ்டில் 21 இன்னிங்ஸில் 32 சிக்ஸர்களை அடித்துள்ளார்.
முன்னதாக கடந்த 2014ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியின் அதிரடி வீரர் பிராண்டன் மெக்கலம் 33 சிக்ஸர்களை விளாசியதே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸராக இருந்து வருகிறது. இந்நிலையில் இத்தொடரின் மூலம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அவரது சாதனையை முடியடிக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார்.
இது தவிர, இத்தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் நவ்ஜோத் சிங் சித்துவை பின்னுக்கு தள்ளி 10ஆம் இடத்தைப் பிடிக்கும்வாய்ப்பையும் பெற்றுள்ளார். இந்தில் சித்து 51 டெஸ்ட் போட்டிகளில் 78 இன்னிங்ஸ்களில் விளையாடி 38 சிக்ஸர்களை அடித்து தற்சமயம் 10ஆம் இடத்தில் தொடர்கிறார்.
அதேசமயம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இதுவரை 14 டெஸ்டில் 26 இன்னிங்ஸ்களில் 35 சிக்சர்களை அடித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் 90 சிக்ஸர்களுடன் முதலிடத்திலும், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 88 சிக்ஸர்களுடன் இரண்டாம் இடத்திலும், மகேந்திர சிங் தோனி 78 சிக்ஸர்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
தற்சமயம் 22வயதே ஆகும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார். சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், ரிஷப் பந்திற்கு அடுத்தபடியாக இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரராகவும் ஜெய்ஸ்வால் இருந்தார். மேலும் இந்திய அணிக்காக 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 3 சதங்கள், 8 அரைசதங்களுடன் 1407 ரன்களை குவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கே), ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.