கோவா அணிக்காக விளையாடும் முடிவை திரும்ப பெற்ற யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் அந்தஸ்த்தை பெற்றுள்ளவர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இவர் கடந்த 2023ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். மேற்கொண்டு இந்த ஆண்டு இந்திய ஒருநாள் அணிக்காகவும் அறிமுகமானர்.
இந்திய அணியின் மிக முக்கிய தொடக்க வீரராக திகழ்வும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்திய அணிக்கு தேர்வானார். பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் ஒரு வருடத்தில் 1000 ரன்களுக்கு மேல் அடித்ததுடன், உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும் அதிரடியாக விளையாடி கவனத்தை ஈர்த்துள்ளர்.
இந்நிலையில் தான் அவர் மும்பை அணியில் இருந்து விலகி கோவா அணிக்காக விளையாடபோவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் அவர் மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் இதற்கான தடையில்லா சான்றிதழையும் கேட்டிருந்தார். மும்பை அணியில் ஏற்பட்ட சலசலப்பின் காரணமாகவும், கோவா அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்ததன் காரணமாகவும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டிருந்தது.
முன்னதாக அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சித்தேஷ் லட் உள்ளிட்ட மும்பை அணிக்காக விளையாடிய வீரர்கள் கடந்த ரஞ்சி கோப்பை தொடரில் கோவா அணிக்காக விளையாடி இருந்தனர். அவர்கள் வரிசையில் ஜெய்ஸ்வாலும் இணைந்ததாக செய்திகள் பரவின. இந்நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கோவா அணிக்காக விளையாடும் தனது முடிவிலிருந்து பின்வாங்கி மீண்டும் மும்பை அணிக்காக விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளான.
Also Read: LIVE Cricket Score
இதுகுறித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில், "கீழே கையொப்பமிட்டுள்ள நான், கோவாவுக்குச் செல்வதற்கான சில குடும்பத் திட்டங்கள் தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், எனக்கு வழங்கப்பட்ட தடையில்லா சான்றை திரும்பப் பெறுவதற்கான எனது கோரிக்கையை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எனவே, இந்த சீசனில் மும்பைக்காக விளையாட என்னை அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.