இந்திய மகளிர் ஏ அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகளைக் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை ஆஸ்திரேலிய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது. 

Advertisement

அதன்பின் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய ஏ அணி வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பிரிஸ்பேனில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க வீராங்கனை அலிசா ஹீலி அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார். 

Advertisement

மேலும் இப்போட்டியில் சதடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹீலி 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 91 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தவிர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிம் கார்த் 41 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் ஆஸ்திரேலியா மகளிர் ஏ அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்களைச் சேர்த்தது. 

இந்திய மகளிர் ஏ அணி தரப்பில் மின்னு மணி 3 விக்கெட்டுகளையும், சைமா தாக்கூர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய மகளிர் ஏ அணியில் ஷஃபாலி வார்மா, தரா காஜிர், தெஜல் ஹசாப்னிஸ், ராகவி பிஸ்ட் உள்ளிட்டோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த யஷ்திகா பாட்டியா - ராதா யதாவ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் அரைசதம் கடந்து அசத்திய யஷ்திகா பாட்டியா 66 ரன்களில் விக்கெட்டை இழக்க, ராதா யாதவும் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய தனுஜா கன்வரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவரும் 50 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பிரேமா ராவத் 32 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 

Also Read: LIVE Cricket Score

இதன்மூலம் இந்திய மகளிர் ஏ அணி 49.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய மகளிர் ஏ அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் ஏ அணி 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் வென்று அசத்தியுள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 17ஆம் தேதி பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது. 

Advertisement

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News