பாகிஸ்தானின் அடுத்த கேப்டனாக இவர்களை தேர்வு செய்யலாம் - யூனிஸ் கான் கருத்து!
சமீப காலமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமானது அடுத்தடுத்த தோல்விகளைச் சந்தித்து வருவதன் காரணமாக கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் நாளுக்கு நாள் அந்த அணியின் நட்சத்திர வீரர்கள், கேப்டன்கள் மீதான விமர்சனங்களும் அதிகரித்தன. இந்நிலையில் பாகிஸ்தானின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டன் பதிவியில் இருந்து விலகுவதாக நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் சமீபத்தில் அறிவித்தார்.
முன்னதாக, கடந்தாண்டு நடந்து முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியானது லீக் சுற்றுடனே வெளியேறி ஏமாற்றமளித்தது. இத்தோல்விக்கு பொறுபேற்கும் வகையில் அணியை கேப்டனாக வழிநடத்திய பாபர் ஆசாம் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலுகுவதாக அறிவித்தார். இதையடுத்து டெஸ்ட் அணிக்கு ஷான் மசூத்தும், டி20 அணிக்கு ஷாஹீன் அஃப்ரிடியும் தேர்வுசெய்யப்பட்டனர். ஆனால் இவர்களது தலைமையிலும் பாகிஸ்தான் அணியானது அடுத்தடுத்த தோல்விகளையே சந்தித்து வந்தது.
இதனால் இந்தாண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாபர் ஆசாம் மீண்டும் கேப்டன் பதவியை ஏற்றார். ஆனால் நடந்து முடிந்த இந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் அடுத்தடுத்த தோல்விகளைச் சந்தித்த பாகிஸ்தான் அணியானது லீக் சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றமளித்தது. இதனால் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் அவர் தனது கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக சமூக வலைதள பதவின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அந்த அணியின் புது கேப்டனை தேர்வுசெய்யும் முனைப்பில் இறங்கியுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் அடுத்த கேப்டனாக ஃபகர் ஸமான் அல்லது முகமது ரிஸ்வான் ஆகியோரை தேர்ந்தெடுக்கலாம் என அந்த அணியின் முன்னாள் வீரர் யூனிஸ் கான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “கேப்டன் பதவியில் இருந்து விலகி இருப்பது பாபர் ஆசாமுக்கு சாதகமாக இருக்கும். எங்கள் கலாச்சாரத்தில், நாங்கள் பெரும்பாலும் பெரிய வீரரை கேப்டனாக ஆக்குகிறோம், இது தவறு என்று நான் நினைக்கிறேன். அதனால் அணியின் அடுத்த கேப்டனாக முகமது ரிஸ்வான் அல்லது ஃபகர் ஸமான் தேர்வு செய்யப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
இந்நிலையில், பாகிஸ்தான் அணியானது அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதனைத்தொடர்ந்து ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணி அங்கு மூன்று போட்டிகளை கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. இதனால் இத்தொடருக்கு புதிய கேப்டன் தலைமையில் பாகிஸ்தான் அணியானது விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.