இது உங்களுக்கு மிகவும் தகுதியான பொறுப்பு - பட்டிதாருக்கு விராட் கோலி வாழ்த்து!
இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது வெற்றிகரமாக 17 சீசன்களை கடந்து, 18ஆவது சீசனில் அடியெடுத்து வைக்க தொடங்கியுள்ளது. இத்தொடரானது மார்ச் மாதம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அதிலும் குறிப்பாக ஐபிஎல் தொடரில் இதுவரை கோப்பையை வெல்ல முடியாமல் தடுமாறி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இம்முறையாவது கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதற்கேற்றவகையில் அந்த அணி ஏலத்திற்கு முன்பாகவே விராட் கோலி, ரஜத் பட்டிதார், யாஷ் தயாள் ஆகியோரை மட்டுமே தக்கவைத்துடன் மற்ற வீரர்களை அணியில் இருந்து கழட்டிவிட்டது. அதிலும் குறிப்பாக அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஃபாஃப் டூ பிளெசிஸையும் கழட்டிவிட்டது. இதனையடுத்து ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் லியாம் லிவிங்ஸ்டோன், புவனேஷ்வர் குமார், டிம் டேவிட், ஜித்தேஷ் சர்மா உள்ளிட்டோரை வாங்கியுள்ளது.
இருப்பினும் அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருந்த நிலையில், தற்போது ரஜத் பட்டிதார் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவதாக ஆர்சிபி நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக விராட் கோலி கேப்டன் பொறுப்பை ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஜத் பட்டிதாரை அந்த அணி நிர்வாகம் கேப்டனாக நியமித்துள்ளது. இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் ரஜத் பட்டிதாருக்கு ஆர்சிபி மற்றும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ரஜத், முதலில், நான் உங்களை வாழ்த்துகிறேன், உங்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அணியில் வளர்ந்த விதம் மற்றும் நீங்கள் சிறப்பாக செயல்பட்ட விததின் மூலம் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ஆர்சிபி ரசிகர்களின் இதயங்களிலும் உண்மையிலேயே ஒரு நீங்கா இடத்தைப் பிடித்துள்ளீர்கள்.
நீங்கள் விளையாடுவதைப் பார்க்க அவர்கள் உற்சாகமாக இருப்பார்கள். எனவே, இது உங்களுக்கு மிகவும் தகுதியான பொறுப்பு என்று நம்புகிறேன். நானும் மற்ற குழு உறுப்பினர்களும் உங்களுக்குப் பின்னால் இருப்போம், உங்களுக்கு எங்கள் முழு ஆதரவும் இருக்கும். இந்தப் பதவியில் வளர்வது என்பது ஒரு பெரிய பொறுப்பு என்பது உண்மைதான். நான் இதை பல வருடங்களாகச் செய்து வருகிறேன், கடந்த சில வருடங்களாக ஃபாஃப் இதைச் செய்து வருகிறார்.
இந்த உரிமையை முன்னோக்கி எடுத்துச் செல்லும் நபராகக் காணப்படுவது உங்களுக்கு ஒரு பெரிய மரியாதை என்று நான் நம்புகிறேன். உங்களுக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் பதவியில் இருப்பதற்கான உரிமையை நீங்கள் பெற்றுள்ளீர்கள், இதன்மூலம் நீங்கள் மேலும் மேலும் பலம் பெறுவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும் அனைத்து ரசிகர்களும் அவரை ஆதரிக்க வேண்டும், அவருக்கு முழு மனதுடன் துணை நிற்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ரஜத் பட்டிதார் (கேப்டன்), யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட், பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டோன், ரசிக் தார், சுயாஷ் சர்மா, குர்னால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், நுவான் துஷாரா, மனோஜ் பந்தேஜ், ஜேக்கப் பெத்தேல், தேவ்தத் பாடிக்கல், ஸ்வஸ்திக் சிகாரா, லுங்கி இங்கிடி, அபிநந்தன் சிங், மோஹித் ரதி.