அறிமுக ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள்; ஆஃப்கானிஸ்தான் வீரர் வரலாற்று சாதனை!
Afghanistan vs Zimbabwe Test, Ziaur Rahman Record:
ஆஃப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி ஹராரேவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேவின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 127 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக அப்துல் மாலிக் 30 ரன்களையும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 37 ரன்களையும் சேர்த்தனர். ஜிம்பாப்வே தரப்பில் பிராட் எவன்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியா ஜிம்பாப்வே அணியில் பென் கரண் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். மேலும் இப்போட்டியில் அவர் 125 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு சிக்கந்தர் ரஸா 65 ரன்களையும், நிக் வெல்ச் 49 ரன்களையும், பிராட் எவன்ஸ் 35 ரன்களையும் சேர்க்க, அந்த அணி முதல் இன்னிங்ஸில் 359 ரன்களைச் சேர்த்து 200 ரன்களுக்கு மேல் முன்னிலையும் பெற்றது. ஆஃப்கானிஸ்தான் தரப்பில் அறிமுக வீரர் ஸியாவுர் ரஹ்மான் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 34 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் இப்ராஹிம் ஸத்ரான் 25 ரன்களுடனும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதையடுத்து 198 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணி இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. இந்த நிலையில், இப்போட்டியில் ஆஃப்கானிஸ்தானின் அறிமுக வீரர் ஜியாவுர் ரஹ்மான் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் தனித்துவ சாதனையை படைத்துள்ளார்.