சர்வதேச டெஸ்டில் முற்சதம் விளாசி சாதனைகளை குவித்த வியான் முல்டர்!
Wiaan Mulder Record: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் வியான் முல்டர் முற்சதம் விளாசி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்க அணி அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புலவாயோவில் நடைபெற்றறு வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ஸோர்ஸி 10 ரன்னிலும், அறிமுக வீரர் செனொக்வானே 3 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து அரைசதம் கடந்திருந்த பெடிங்ஹாம், பிரிட்டோரிஸ் ஆகியோரும் விக்கெட்டை இழந்தனர்.
அதேசமயம் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் வியான் முல்டர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் முற்சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார். அதன்படி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முற்சதம் விளாசிய இரண்டாவது தென் ஆப்பிரிக்க வீரர் எனும் பெருமையை வியான் முல்டர் பெற்றுள்ளார். முன்னதாக அந்த அணியின் முன்னாள் வீரர் ஹாசிம் அம்லா இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
இதுதவிர்த்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கேப்டனாக செயல்பட்ட முதல் டெஸ்ட் போட்டியில் முற்சதம் விளாசிய வீரர் எனும் தனித்துவ சாதனையையும் படைத்துள்ளார். மேற்கொண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக முற்சதத்தை விளாசிய இரண்டாவது வீரர் எனும் பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதற்கு முன் இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் 278 பந்துகளில் முற்சதம் விளாசி இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
அதிவேகமாக முற்சதம் விளாசிய வீரர்கள்
- 278 பந்துகள் - வீரேந்தர் சேவாக் - இந்தியா vs தென் ஆப்பிரிக்கா (சென்னை, 2008)
- 297 பந்துகள் - வியான் முல்டர் - தென் ஆப்பிரிக்கா vs ஜிம்பாப்வே (புலவாயோ, 2025)
- 310 பந்துகள் - ஹாரி புரூக் - இங்கிலாந்து vs பாகிஸ்தான் (முல்தான், 2024)
- 355 பந்துகள் - வாலி ஹேமண்ட் - இங்கிலாந்து vs நியூசிலாந்து (ஆக்லாந்து, 1933)
- 362 பந்துகள் - மேத்யூ ஹேடன் - ஆஸ்திரேலியா vs ஜிம்பாப்வே (பெர்த், 2003)
இதுதவிர்த்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணிக்காக ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்களைக் குவித்த வீரர் எனும் ஹாசிம் அம்லாவின் சாதனையையும் வியான் முல்டர் முறியடித்துள்ளார். முன்னதாக ஹாசிம் அம்லா ஒரு இன்னிங்ஸில் 311 ரன்களை சேர்த்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்சமயம் வியான் முல்டர் அந்த சாதனையை முறியடித்து அசத்தியது மட்டுமின்றி, மேலும் ரன்களைக் குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்கா பிளேயிங் லெவன்: டோனி டி ஸோர்ஸி, லெசெகோ செனோக்வானே, வியான் முல்டர்(கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், டெவால்ட் பிரீவிஸ், கைல் வெர்ரைன், செனுரன் முத்துசாமி, கார்பின் போஷ், ப்ரீனெலன் சுப்ரயன், கோடி யூசுஃப்
Also Read: LIVE Cricket Score
ஜிம்பாப்வே பிளேயிங் லெவன்: தியான் மேயர்ஸ், டகுட்ஸ்வானாஷே கைடானோ, நிக் வெல்ச், சீன் வில்லியம்ஸ், கிரெய்க் எர்வின்(கேப்டன்), வெஸ்லி மதேவெரே, தஃபட்ஸ்வா சிகா, வெலிங்டன் மசகட்சா, குண்டாய் மாடிகிமு, பிளெஸிங் முசரபானி, தனகா சிவாங்கா