மழையால் கைவிடப்பட்ட ஜிம்பாப்வே - அயர்லாந்து போட்டி; தொடரை வென்றது ஜிம்பாப்வே!
அயர்லாந்து அணி தற்போது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடியது. இதில் தற்போது இரு அணிகளுக்கும் தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது.
இத்தொடரின் முதல் போட்டி மழையால் முழுவதுமாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றிருந்தது. இந்நிலையில் ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது.
மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் மருமணி 7 ரன்னிலும், வெஸ்லி மதெவரே ரன்கள் ஏதுமின்றியும், பிரையன் பென்னட் 16 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய சிக்கந்தர் ரஸா ஒருபக்கம் தாக்குப்பிடித்து அதிரடியாக விளையாடினார்.
இப்போட்டியில் ரஸா 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 34 ரன்களைச் சேர்த்த நிலையில், அடுத்து களமிறங்கிய ரியான் பார்ல் 17 ரன்களையும், டோனி முனியங்கா 26 ரன்களையும், தஷிங்கா முசேகிவா 26 ரன்களையும் சேர்த்ததன் மூலம் ஜிம்பாப்வே அணி 18 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்களைச் சேர்த்தது. அப்போது மீண்டும் மழை பெய்த காரணத்தால் இப்போட்டியானது தடைபட்டது.
Also Read: Funding To Save Test Cricket
அதன்பின் தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் இப்போட்டியின் முடிவும் ஜிம்பாப்வே அணிக்கு சாதகமாக மாறியது. இறுதியில் இப்போட்டியும் முதல் இன்னிங்ஸுடன் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை ஜிம்பாப்வே அணி 1-0 என்ற கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.