ஷுப்மன் கில்லிற்கு நான் ரசிகன் - ஜிம்பாப்வே வீரர் பிராட் எவன்ஸ்!
இந்திய அணி ஜிம்பாப்வேவியில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் நேற்று நடைபெற்ற கடைசி போட்டியில் போராடி வெறும் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 289/9 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக 15 பவுண்டரி 1 சிக்சருடன் தனது முதல் சதமடித்த சுப்மன் கில் 130 ரன்களும் இஷான் கிசான் 50 ரன்களும், ஷிகர் தவான் 40 ரன்களும் எடுக்க ஜிம்பாப்வே சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ப்ராட் எவன்ஸ் 5 விக்கெட்களை சாய்த்தார்.
அதன்பின் 290 ரன்களை துரத்திய அந்த அணிக்கு சீன் வில்லியம்ஸ் 45 ரன்கள் எடுத்தது தவிர கயா, கேப்டன் சகப்வா போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர். அதனால் 169/7 என சரிந்த அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் மிரட்டிய நம்பிக்கை நட்சத்திரம் சிகந்தர் ராஸா 8ஆவது விக்கெட்டுக்கு ப்ராட் எவன்ஸ் உடன் இணைந்து 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கடைசிவரை வெற்றிக்கு போராடினார். ஆனால் கடைசி நேரத்தில் பிராட் எவன்ஸ் 28 ரன்களிலும் 9 பவுண்டரி 3 சிக்சருடன் சிகந்தர் ராசா 115 ரன்களிலும் ஆட்டமிழந்ததால் 49.3 ஓவரில் 276 ரன்களுக்கு ஆல் அவுட்டான ஜிம்பாப்வே ஆறுதல் வெற்றியை பதிவு செய்யும் வாய்ப்பை நழுவ விட்டது.
இதனால் 3 – 0 (3) என்ற கணக்கில் இளம் வீரர்களுடன் ஒயிட்வாஷ் வெற்றி பெற்ற இந்தியா கோப்பையை வென்று அசத்தியது. இந்த வெற்றிக்கு 130 ரன்களும் கடைசி நேரத்தில் மிரட்டிய சிகந்தர் ராசா கொடுத்த கேட்ச்சை கச்சிதமாக பிடித்த சுப்மன் கில் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அத்துடன் தொடர்நாயகன் விருதையும் அவரே தட்டி சென்றார்.
இந்நிலையில் 22 வயதே ஆனாலும் இவ்வளவு திறமைகள் வாய்ந்த சுப்மன் கில்லுக்கு நான் ரசிகன் என்று தெரிவிக்கும் ஜிம்பாப்வே இளம் வீரர் ப்ராட் எவன்ஸ் நேற்றைய போட்டியின் முடிவில் அவருடைய ஜெர்சியை பரிசாக பெற்றதாகவும் பூரிப்புடன் பேசினார்.
இதுகுறித்து பேசிய அவர், “ஷுப்மன் கில் இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றினார். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன் என்பதாலேயே அவருடைய ஜெர்சியை பெற்று இன்று அவருக்கு எதிராக விளையாடியுள்ளேன். அவரை உலகத்தரம் வாய்ந்த வீரர் என முதல் போட்டியிலிருந்தே நீங்கள் சொல்லலாம். எடுத்துக்காட்டாக சிங்கிள் எடுக்கும் போது அவர் நினைக்கும் இடத்தில் பந்தை அடித்து எடுக்கிறார். அதுபோன்ற நுணுக்கம் நீண்ட காலம் பயிற்சி எடுத்தால் தான் உங்களுக்கு கிடைக்கும். அவரின் ஆட்டத்தை பார்த்து ஆச்சரியமடைந்த நான் அவருடைய ரசிகனானேன்.
அவரை ஐபிஎல் தொடரில் விளையாடிய போது டிவியிலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை வென்ற போது நேரிலும் பார்த்துள்ளேன். இன்று அவருக்கு எதிராக விளையாடியது சிறப்பானது. இந்த போட்டி முடிந்த பின் அவருக்கு என்னுடைய ஜெர்சியை கொடுத்தேன். பதிலுக்கு அவர் தன்னுடைய ஜெர்ஸியை கழற்றி கொடுத்தார். அதை நான் போட்டி துவங்குவதற்கு முன்பாகவே அவரிடம் கேட்டிருந்தேன். அவரும் எனக்கு தருவதாக உறுதியளித்திருந்தார்” என்று கூறினார்.