
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் வரும் 14ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகின்றன. இந்த மைதானத்தில் சுமார் 1.30 லட்சம் பேர் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்கலாம். கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் ஏற்கெனவே விற்று தீர்ந்துள்ளன.
இந்நிலையில் இந்த போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் நேற்று காந்தி நகரில் ஆலோசனை நடத்தினார். இதில் மாநில உள்துறை இணையமைச்சர் ஹர்ஷ் சங்கவி, மாநில போலீஸ் டிஜிபி விகாஸ் சஹாய், அகமதாபாத் காவல் துறை ஆணையர் ஜி.எஸ்.மாலிக் மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதல்வர் பூபேந்திர படேல் ஆய்வு செய்துள்ளார். கிரிக்கெட் போட்டியின் போது எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு காவல்துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மைதானத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களின் நடமாட்டம் இருக்கும். சமீபத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.