BBL 12: வரலாற்றில் மிக குறைவான ரன்களுக்கு ஆல் அவுட் ஆன சிட்னி தண்டர்!
பிக்பேஷ் லீக்கில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 15 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, கிரிக்கெட் வரலாற்றில் குறைவான ஸ்கோரை அடித்த அணி என்ற மோசமான சாதனையை படைத்தது சிட்னி தண்டர் அணி.
பிக்பேஷ் டி20 லீக் தொடரின் 12ஆவது சீசன் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. சிட்னி தண்டர் - அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சிட்னியில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியில் கிறிஸ் லின் அதிகபட்சமாக 36 ரன்கள் அடித்தார். 27 பந்தில் அவர் 36 ரன்கள் அடித்தார். பின்வரிசையில் காலின் டி கிராண்ட் ஹோம் 24 பந்தில் 33 ரன்கள் அடித்தார். அவர்கள் இருவரைத்தவிர மற்ற அனைவருமே மிக சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 20 ஓவரில் 139 ரன்கள் மட்டுமே அடித்தது.
Trending
அதன்பின் 140 ரன்கள் எடுத்தால் வெற்று என்ற எளிய இலக்கை விரட்டிய சிட்னி தண்டர் அணி ஒவ்வொரு ஓவரிலும் விக்கெட்டை இழந்து, வெறும் 5.5 ஓவரில் 15 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தது. இதன்மூலம் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிட்னி தண்டர் அணியின் 5 வீரர்கள் டக் அவுட்டாகினர். ஒரு வீரர் கூட இரட்டை இலக்க ரன்களை அடிக்கவில்லை.
டி20 கிரிக்கெட்டில் மட்டுமல்லாது, கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு அணி அடித்த குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான். இதற்கு முன்னதாக துருக்கி அணி அடித்த 21 ரன்கள் தான் குறைவான ஸ்கோராக இருந்தது. அதைவிட 6 ரன்கள் குறைவாக அடித்து மோசமான சாதனையை படைத்துள்ளது சிட்னி தண்டர் அணி.
இதனை செய்வதற்கு உறுதுணையாக இருந்த அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியின் ஹென்றி தோர்ன்டன் வெறும் 3 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளைக் வீழ்த்தி அசத்தியிருந்தார். போட்டி முடிவுக்கு பின் பேசிய அவர், “இதனை என்னாலும் நம்பமுடிவில்லை. நானும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன். ஏனெனில் சிட்னி தண்டர் போன்ற வலிமையான அணி இப்படி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்திருப்பது அதிர்ச்சியாகவேவுள்ளது” என தெரிவித்துள்ளார்.
அதேபோல் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸும் '8-10 off 5' என்று பதிவிட்டு ஆச்சரியத்தை குறிக்கும் எமோஜிகளையும் இணைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now