
ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாட இருக்கிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று (ஜனவரி 29) கலேவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரர் ஜோஷ் இங்கிலிஷுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாம் கொன்ஸ்டாஸ், ஸ்காட் போலண்ட் ஆகியோர் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா மற்றும் டிராவிஸ் ஹெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டிராவிஸ் ஹெட் முதல் ஓவரில் இருந்தே தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.
அவருடன் இணைந்து உஸ்மான் கவாஜாவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் முதல் விக்கெட்டிற்கு இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் அபாரமாக விளையாடி வந்த டிராவிஸ் ஹெட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 57 ரன்களைச் சேர்த்த நிலையில் டிராவிஸ் ஹெட் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் களமிறங்கிய லபுஷாக்னேவும் நிதானமாக விளையாடிய நிலையில், மற்றொரு தொடக்க வீரரான உஸ்மான் கவாஜாவும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.