
ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று (ஜனவரி 29) கலேவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் உஸ்மான் கவாஜா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 92 ரன்கள்பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிராவிஸ் ஹெட் விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னே 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து கவாஜாவுடன் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித்தும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் தங்கள் சதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 330 ரன்களைக் குவித்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை உஸ்மான் கவாஜா 147 ரன்களுடனும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 104 ரன்களுடனும் தொடர்ந்தனர். இன்றைய ஆட்டத்திலும் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் ஸ்டீவ் ஸ்மித் 12 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 141 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.