
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 07ஆம் தேதி டிரினிடாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸீல் 357 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக டோனி டி ஸோர்ஸி 78 ரன்களையும், கேப்டன் டெம்பா பவுமா 86 ரன்களையும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் வாரிகன் 4 விக்கெட்டுகளையும், ஜெயடன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் மைக்கேல் லூயிஸ் 35 ரன்களுக்கும், கேப்டன் கிரேய்க் பிராத்வைட் 25 ரன்களுக்கும், கேசி கார்டி 45 ரன்களிலும், அலிக் அதானாஸ் 3 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 4 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து நேற்று நடைபெற்ற நான்காம் நாள் ஆட்டத்தை விண்டீஸ் தரப்பிக் கவேம் ஹாட்ஜ் 11 ரன்களுடனும், ஜேசன் ஹோல்டர் 13 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் கவேம் ஹாட்ஜ் 25 ரன்களுக்கும்,ஜேசன் ஹோல்டர் 36 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் வாரிகன் ம்ட்டும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 35 ரன்களைச் சேர்த்தார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.