
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளைடாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது நாளை பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் சொந்த மண்ணில் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றிய கையுடன் இத்தொடரை எதிர்கொள்கிறது. மறுபக்கம் நியூசிலாந்து அணியோ இலங்கை அணிக்கு எதிரான அடுத்தடுத்த டெஸ்ட் தோல்விகளுடன் தொடரை இழந்து கையோடு இப்போட்டியில் விளையாடவுள்ளது.
இதனால் இப்போட்டியில் எந்த அணி ஆதிக்கம் செலுத்தி வெற்றியைப் பதிவுசெய்யும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. மேற்கொண்டு இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்து நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லேதம் தனது கேப்டன் பதவி குறித்தும், இந்திய அணி குறித்தும் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.