
மூன்று வடிவிலா கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று டொமினிக்கா மைதானத்தில் துவங்கியது. இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டாஸை வென்று முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் வரிசையின் முதல் சரிவை ரவிச்சந்திரன் அஸ்வின் ஜூனியர் சந்திரபால் விக்கெட்டை கிளீன் போல்ட் செய்து கைப்பற்றினார். இந்த முறையில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் இதன் மூலம் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்தார். தொடர்ச்சியாக அவரது சுழற் பந்துவீச்சு மாயாஜாலத்தில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ் அவ்வப்போது விக்கெட்டுகளை கொடுத்து சிக்கிக் கொண்டது. இன்னொரு முனையில் அவரது சுழல் கூட்டாளி ரவீந்திர ஜடேஜாவின் தாக்குதலும் மிகச் சிறப்பாக இருந்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி 64.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரண்களுக்கு சுருண்டது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 24.3 ஓவர்கள் பந்துவீசி, ஆறு மெய்டன்கள் செய்து, 60 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார். ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து விளையாடிய இந்திய அணி நேற்று விக்கெட் ஏதும் இழக்காமல் 80 ரன்கள் எடுத்திருக்கிறது. இந்திய அணி தரப்பில் தொடக்க வீரராக வந்த அறிமுக வீரர் ஜெய்ஸ்வால் 40 ரன்களும், கேப்டன் ரோஹித் சர்மா 30 ரன்களும் எடுத்து களத்தில் நிற்கிறார்கள்.