
இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை தொடர் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபாய், அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது.
இதில் குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்று ஆட்டங்களில் தேர்வாகும் இரு அணிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. அக்டோபர் 24 அன்று துபாயில் தங்களுடைய முதல் ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன.
கடந்த 2017 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை வென்றது. எனினும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் ஒருமுறை கூட வீழ்த்தியதில்லை.
இந்நிலையில் பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி, இந்தமுறை டி20 உலகக்கோப்பையில் இந்தியாவை நாங்கள் வீழ்த்துவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.