இந்த ஆடுகளம் நிச்சயம் எனக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியும் தான் தந்தது - ஹர்திக் பாண்டியா!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அமைக்கப்பட்ட ஆடுகளம் குறித்து ஹர்திக் பாண்டியா தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 99 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி கடைசி ஓவர் வரை போராடி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்நிலையில் நேற்றைய போட்டி நடைபெற்ற ஆடுகளம் தரக்குறைவாக இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் குற்றம் சாட்டியுள்ளார். அதேபோன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் டிக்கெட் வாங்கி பார்த்த இந்த போட்டி அவர்களுக்கு ஏமாற்றம் கொடுத்திருக்கும் என நியூசிலாந்து வீரர் ஜிமி நீசம் தெரிவித்துள்ளார்.
Trending
இதனிடையே வெற்றி பெற்ற பிறகு பேசிய ஹர்திக் பாண்டியா ஆடுகளம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். இதுகுறித்து பேசிய அவர், “நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நான் ஆரம்பத்தில் இருந்தே நம்பினேன். ஆனால் வெற்றி மிகவும் தாமதமாக கிடைத்தது. இது போன்ற போட்டிகளில் சின்ன சின்ன தருணங்கள் கூட மிகவும் முக்கியமாகும். ஆட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது நீங்கள் பதற்றப்படக்கூடாது. ரிஸ்க் எதுவும் எடுக்காமல் சிங்கிள்ஸ் எடுக்கவே அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அப்படி செய்தால் நம் மீது இருக்கும் அழுத்தம் குறையும். இந்த யுத்தியை பயன்படுத்தியே நாங்கள் விளையாடினோம். நானும் சூர்யகுமார் யாதவும் அடிப்படை விஷயத்தில் கவனம் செலுத்தினோம். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்த ஆடுகளத்தை பார்த்து எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. நாங்கள் விளையாடிய இரண்டு ஆடுகளமும் டி20 போட்டிக்கு ஏற்றது கிடையாது. கடினமான ஆடுகளத்தில் விளையாடுவது குறித்து எங்களுக்கு எந்த அச்சமும் இல்லை.
சவால்களை எதிர்கொள்ள நாங்கள் எப்போதும் தயாராக தான் இருக்கிறோம். ஆனால் டி20 போட்டிக்கு ஏற்ற ஆடுகளும் இது கிடையாது. ஆடுகளம் அமைப்பது எங்கேயோ பிரச்சனை இருந்திருக்கிறது. ஆடுகளப் பராமரிப்பாளர் அல்லது மைதான நிர்வாகிகள் நாங்கள் டி20 போட்டி விளையாட போகிறோம் என்று தெரிந்தும் முன்கூட்டியே ஆடுகளத்தை தயாரித்து இருக்க வேண்டும். மற்றபடி எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
இந்த ஆடுகளத்தில் 120 ரன்கள் அடித்தால் அது வெற்றி இலக்காக இருக்கும். பந்துவீச்சாளர்கள் எங்களுடைய பிளான் படியே செயல்பட்டார்கள். நியூசிலாந்து வீரர்கள் சிங்கிள்ஸ் எடுக்க கூட விடாமல் கடும் நெருக்கடி கொடுத்தார்கள். எங்களுடைய பந்துவீச்சாளர்களை நாங்கள் சுழற்சி முறையில் சிறப்பாக செயல்படுத்தினோம்.
ஆட்டத்தில் பனிப் பொழிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. போட்டியில் இரண்டாவது பாதியில் வீசிய நியூசிலாந்து வீரர்கள் எங்களை விட பந்தை சிறப்பாக ஆடுகளத்தில் வீசினார்கள்.பந்து நன்றாகவும் திரும்பியது. இந்த ஆடுகளம் நிச்சயம் எனக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியும் தான் கொடுத்திருக்கிறது” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now