
இந்தியா - வங்கதேச அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டாக்காவில் உள்ள மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது. 2 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1- 0 என முன்னிலையில் இருப்பதால் தொடரின் வெற்றியாளரை நிர்ணயிக்கும் போட்டியாக இது அமைந்துள்ளது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி சகிப் அல் ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார். பிட்ச் நேரம் போக போக பேட்டிங்கிற்கு மிகவும் கடினமாக மாறும் என்பதால் டாஸில் தோற்ற இந்தியாவுக்கு பின்னடைவாகவே பார்க்கப்பட்டது.
ஆனால் அனைத்தையும் மாற்றி அமைத்தனர் இந்திய பந்துவீச்சாளர்கள். வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் முதல் 14 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் அடித்தளம் போட்டு வந்தனர். அப்போது வந்த அஸ்வின் பெரும் திருப்புமுணையை ஏற்படுத்தினார். அவரின் சுழலில் சிக்கி நட்சத்திர பேட்ஸ்மேனான ஹுசைன் சாண்டோ 24 ரன்களுக்கு வெளியேறினார்.
இந்த முதல் விக்கெட்டிற்கு பிறகு ஒருபுறம் அஸ்வின் மற்றும் மறுபுறம் ஜெய்தேவ் உனத்கட் ஆகியோரிடம் சிக்கி வங்கதேசம் சின்னாப்பின்னம் ஆனது. சாகீர் ஹாசன் (15 ரன்கள்), கேப்டன் ஷாகிப் அல் ஹசன் (16 ரன்கள் ), முஸ்ஃபிக்கூர் ரஹிம் (26 ரன்கள்), லிட்டன் தாஸ் (25 ரன்கள்) என அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து நடையை கட்டினார்.