
ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான புத்தாண்டு டெஸ்ட் போட்டியானது புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்கள் ஜிம்பாப்வே பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினர்.
அந்த அணியில் அதிகபட்சமாக ரஷித் கான் 25 ரன்களையும், ரஹ்மத் ஷா 19 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 44.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்களில் ஆல் அவுட்டானது. ஜிம்பாப்வே அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சிக்கந்தர் ரஸா மற்றும் நியூமன் நியாம்ஹுரி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், பிளெஸ்ஸிங் முசரபானி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணியில் சிக்கந்தர் ரஸா 61 ரன்களையும், கிரேய்க் எர்வின் 75 ரன்களையும் சேர்த்த நிலையில், இறுதியில் அதிரடியாக விளையாடிய சீன் வில்லியம்ஸ் 49 ரன்களையும் சேர்த்து அணியை முன்னிலைக்கு அழைத்துச் சென்றனர். இதன்மூலம் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 243 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் ரஷித் கான் 4 விக்கெட்டுகளையும், அஹ்மத்ஸாய் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.