
WI vs AUS, 2nd Test: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்துள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி கிரெனடாவில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் பியூ வெப்ஸ்டர் 60 ரன்களையும், அலெக்ஸ் கேரி 63 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஸாரி ஜோசப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கிரேய்க் பிரேத்வைட் மற்றும் ஜான் காம்பெல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய கிரேய்க் பிராத்வைட் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேசி கார்டியும் 6 ரன்களில் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஜான் காம்பெல் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 40 ரன்களில் ஆட்டமிழந்தார்.