
இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 267 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி கடந்த 24 ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி வீரர்கள் ஜாக் க்ராவ்லி(2), பென் டக்கெட் (9) ஆலி போப்(10) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 21 ரன்களுக்கே இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் ஹாரி ப்ரூக்கும் ஜோ ரூட்டும் இணைந்து அபாரமாக பேட்டிங் விளையாடி இருவருமே சதமடித்தனர். அதிரடியாக ஆடி சதமடித்த ஹாரி ப்ரூக் 176 பந்தில் 186 ரன்களையும், ரூட் 153 ரன்களையும் குவிக்க முதல் இன்னிங்ஸில் 435 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது இங்கிலாந்து அணி.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. டெவான் கான்வே(0), கேன் வில்லியம்சன்(4), வில் யங்(2) ஆகியோர் படுமோசமாக ஆடி ஆட்டமிழந்தனர். கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்து விளையாடிய தொடக்க வீரர் டாம் லேதமும் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஹென்ரி நிகோல்ஸ் 30 ரன்களுக்கும், டேரைல் மிட்செல் 13 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, 103 ரன்களுக்கே நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் அபாரமாக பேட்டிங் ஆடிய கேப்டன் டிம் சௌதி அரைசதம் அடித்து 73 ரன்களை விளாச, முதல் இன்னிங்ஸில் 209 ரன்கள் அடித்தது நியூசிலாந்து அணி.