
நியூசிலாந்தில் சுற்றுபயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெலிங்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 65 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 315 குவித்தது. ஸாக்கிராவ்லி 2, ஆலி போப் 10, பென்டக்கெட் 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். 21 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் ஹாரி புரூக், ஜோ ரூட் ஜோடி அபாரமாக விளையாடி பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டது. ஹாரி புரூக் 184, ஜோ ரூட் 101 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நேற்று 2ஆவது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 87.1 ஓவரில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 435 ரன்கள் குவித்த நிலையில் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. ஹாரி புரூக் 176 பந்துகளில், 24 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 186 ரன்கள் எடுத்த நிலையில் மேட் ஹென்றி வீசிய பந்தில் அவரிடமே பிடிகொடுத்து வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட்டுடன் இணைந்து 302 ரன்கள் சேர்த்தார்.