
ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 24ஆவது லீக் ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது 309 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்து இந்த தொடரின் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக தொடக்க வீரர் டேவிட் வார்னர் மற்றும் அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் சதமடித்தது குறிப்பிடத்தக்கது.
பின்னர் 400 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நெதர்லாந்து அணியானது 21 ஓவர்களில் 90 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் ஆஸ்திரேலிய அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி சார்பாக 3 ஓவர்களை மட்டுமே வீசிய ஆடம் ஸாம்பா 8 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்.