
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலந்து அணியில் அதிரடியாக விளையாடிய பென் டக்கெட் அரைசதம் கடந்ததுடன் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 52 ரன்களையும், லியாம் லிவிங்ஸ்டோன் ஒரு பவுண்டரி 5 சிக்ஸர்கள் என 43 ரன்களையும் சேர்த்தனர்.
அவர்களைத் தவிர்த்து கேப்டன் ஜோஸ் பட்லர் 24 ரன்களைச் சேர்த்த்தை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் சஞ்சு சாம்சன் 3 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா 25, சூர்யகுமார் யாதவ் 14, திலக் வர்மா 18, வாஷிங்டன் சுந்தர் 10, அக்ஸர் படேல் 15, துருவ் ஜுரெல் 2 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, இறுதிவரை போராடிய ஹர்திக் பாண்டியாவும் 40 ரன்களில் ஆட்டமிழந்தனர்.இறுதியில், இந்தியா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டு இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.