
அயர்லாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை வங்கதேச அணி வென்ற நிலையில், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று வங்கதேச அணி 2-0 என டி20 தொடரை வென்றது. இந்நிலையில், தொடரின் கடைசி டி20 போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் விளையாடிய வங்கதேச அணியில் ஷமிம் ஹுசைன் மட்டுமே பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 42 பந்தில் ஷமிம் ஹுசைன் 51 ரன்கள் அடித்தார். அவரைத்தவிர மற்ற அனைத்து வீரர்களுமே சொற்ப ரன்களுக்கு மளமளவென ஆட்டமிழக்க, 19.2 ஓவரில் 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வங்கதேச அணி. அயர்லாந்து அணியில் அபாரமாக பந்துவீசிய மார்க் அதிர் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து, 125 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய அயர்லாந்து அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான பால் ஸ்டிர்லிங் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பால் ஸ்டிர்லிங் அதிரடியாக விளையாடி 44 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 77 ரன்களை குவித்தார்.