
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்துள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று ராஜ்கோட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே இரு அணிகளும் வெற்றிபெற்றுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரது சதத்தின் மூலம், சர்ஃப்ராஸ் கானின் அரைசதத்தின் மூலமாகவும் முதல்நாள் ஆட்டநேர முடிவில் 326 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ரவீந்திர ஜடேஜா 110 ரன்களுடனும், குல்தீப் யாதவ் ரன்கள் ஏதுமின்ரியும் என தொடர்ந்தனர். இதில் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே குல்தீப் யாதவ் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் சதமடித்து விளையாடி வந்த ரவீந்திர ஜடேஜா 9 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 112 ரன்கள் எடுத்த நிலையில் ஜோ ரூட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.