
மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நன்காவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து அசத்தினார். அதேசமயம் சாம் கொன்ஸ்டாஸ், உஸ்மான் கவாஜா மற்றும் மார்னஸ் லபுஷாக்னே ஆகியோர் அரைசதங்களையும் கடந்து அசத்தினர்.
இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 13 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 140 ரன்களையும், மார்னஸ் லபுஷாக்னே 72 ரன்களையும் அறிமுக வீரர் சாம் கொன்ஸ்டாஸ் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 60 ரன்களையும் சேர்த்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 474 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா இப்போட்டியிலும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த கேஎல் ராகுலும் 24 ரனகளில் ஆட்டமிழந்தார். அதன்பின் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஜெய்ஸ்வால் தனது அரைசதத்தை அடித்தார். பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 82 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து விராட் கோலியும் 36 ரன்கலில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆகாஷ் தீப்பும் ரன்கள் ஏதுமின்றி பெவிலியன் திரும்பினார்.