
வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்து அசத்தின.
இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது டிசம்பர் 8ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஒருநாள் தொடருக்கான வங்கதேச அணியில் காயம் காரணமாக கேப்டன் நஹ்முல் ஹொசைன் சாண்டோவுக்கு இடம்பிடிக்கவில்லை.
மேற்கொண்டு அணியின் நட்சத்திர வீரர் தாவ்ஹித் ஹிரிடோயும் காயம் காரணமாக இந்த ஒருநாள் தொடரில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடருக்கான வங்கதேச அணியின் கேப்டனாக மெஹிதி ஹசன் மிராஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு குழந்தை பிறப்பின் காரணமாக அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் இத்தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.