
ஐபிஎல் வரலாற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணி எல்லாருடைய கணிப்பையும் தவிடு பொடியாக்கி டி20 கிரிக்கெட்டுக்கு இன்னொரு வடிவத்தை கொடுத்திருக்கிற அணியாகும். இந்த அணியில் தற்போது தமிழகத்தைச் சேர்ந்த இடதுகை பேட்ஸ்மேன் இளம் வீரர் சாய் சுதர்சன் முக்கிய பேட்ஸ்மேனாக உயர்ந்திருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டியில் 96 ரன்கள் விளாசி, தன் திறமையின் மூலம் எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.
ஐபிஎல் தொடரின் முடிவுக்குப் பின்னால் பேசிய அவர், “என்னுடைய முந்தைய அனைத்து ஆட்டங்களிலும் நான் கில் உடன் இணைந்து விளையாடினேன். அவர் வேகமாக ரன்கள் எடுத்தார். நான் இந்த முறை சகா பாய் உடன் இணைந்து விளையாடினேன். ரன் விகிதம் சரிந்தது. நாங்கள் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து இருந்தோம். எனவே அடிப்பதற்கான வாய்ப்புகளை எடுப்பது நல்லது என்று நினைத்தேன். நான் அந்த நோக்கத்துடன் விளையாடினேன்.
நான் எதையும் வித்தியாசமாகச் செய்யவில்லை. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பாக நாங்கள் எங்கள் ஆயத்த முகாம்களை நடத்தினோம். அதில் நாங்கள் எங்களைப் பற்றியே நிறைய கற்றுக் கொண்டோம். மேலும் அணியில் எங்களது பங்கு என்னவாக இருக்கும்? நாங்கள் எவ்வாறு சிறந்த பங்களிப்பது? என்று தெளிவாகிக் கொண்டோம்.